பள்ளியின் தோற்றம்

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”  (குறள் – 664)

என்ற வள்ளுவரின் வழி, சொல்லிய வண்ணம் செய்யும் பெருமாளாக  செயலில் காட்டிய  பூ.சா.கோ. சகோதரர்கள் உருவாக்கிய சர்வஜன வித்யாசாலை (1924). சர்வஜன உயர்நிலைப் பள்ளியாக 1939- ல் பெயர் மாற்றம் பெற்றது. மேன்மை பொருந்திய  நிருவாகத்தினரின் ஆதரவும், பணிசெய்து மகிழும் பணியாளர்களின்  அர்ப்பணிப்பும். சர்வஜன உயர்நிலைப் பள்ளியை  1978 ஜூலை மாதம் சர்வஜன மேல்நிலைப் பள்ளியாக  உயர்த்தியது.  2002- ல் பூ.சா.கோ. சர்வஜன மேனிலைப்பள்ளி  என்று பூர்வீகப் பெருமையையும்  இணைத்து பூரித்து நிற்கிறது எங்கள் பள்ளி.

பூளைமேட்டில் பேருந்தும் இல்லை, தொடர்வண்டியும் இல்லை. நான்காம் வகுப்பிற்கு மேல்  படிக்கும் (கல்விபெறும்) வசதியும் இல்லை.  1921ஆம் ஆண்டில் பூளைமேட்டின்  நிலை இது.

பூலைமேடு சுமார் 1924

ஐந்தாம் வகுப்பிலிருந்து படிப்பதற்கு கோவைக்குத் தான் செல்ல வேண்டும். சென்று வருவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லை.  படிக்க விரும்புவோருக்கு அங்கே இடம் கிடைப்பது அரிதாய் இருந்தது. பூ.சா.கோ குடும்பத்தினர்  சிலருக்குக் கோவை உயர்நிலைப்பள்ளியில் இடம் கிடைக்கவில்லை.

கோவைக்கு திருப்பு முனையைத் தந்த திருநாள் 20.10.1921 தீபாவளித் திருநாள். பீளமேடு மக்களின் கல்விக் கனவை நனவாக்கிய நன்னாள். ஆம். உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யப்போகிற தீபஒளி, தீபாவளித் திருநாள் அன்று ஏற்றப்பட்டது. அந்த ஒளி பீளமேட்டு மக்களின் கவலை இருளை நீக்கியது. கல்வி ஒளி பரவியது. உலகமே அறிவு வெளிச்சம் பெற்றது. கோவையின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொன்னாள்.பீளைமேடுத் தொடக்கப்பள்ளியில் 1921- அக்டோபர்; 20- ஆம் நாள் ஊர்மக்கள் ஒன்று கூடினர். பூளைமேட்டிலேயே  உயர்நிலைப்பள்ளி இருந்தால் எல்லோரும் படிக்க வாய்ப்பு ஏற்படுமே என்ற ஊர்மக்களின் ஏக்கம். பூளைமேட்டில் உயர்நிலைப்பள்ளி உருவாக்கியே தீர வேண்டும் என்ற உறுதியை  பூ.சா.கோ. சகோதரர்களிடம் உருவாக்கியது.

 

திரு. ஏ. பி. பத்ரோ

 

 

“பள்ளிக்கு என்ன பெயர் வைக்கலாம்  என்று கேள்வி எழுந்தபோது, கூட்டத்தில் பலரும் பலவிதமான பெயர்களைக் கூற,  சாதி, மத, இன  பேதமோ, ஏழை பணக்காரர் என்ற பேதமோ இல்லாமல் சர்வஜனங்களுக்கும்  இந்த பள்ளிக்கூடம் சொந்தமானது. 

ஆகையால் “சர்வஜன ஹைஸ்கூல் என்று பெயரிடுங்கள் என்று, உரத்த குரலில் கூறிய பூ.சா.கோ. வெங்கடசாமி நாயுடு அவர்களின்  கருத்தை ஒருமித்த குரவில் அனைவரும் ஆமோதித்தனர். “சர்வஜன வித்யாசாலை” பெயரிலேயே  பெருமையுடன் உதயமானது.  அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித வேறுபாடும் பார்க்காமல் அனைத்துத் தரப்பினரும்  கல்விபயிலும் சர்வகலாசாலையாக நம் சர்வஜன பள்ளி விளங்கி வருகிறது.

 

பள்ளி உருவாவதற்கான பொருட்செலவில் பெரும்பகுதியை, பூ.சா.கோ. குடும்பத்தினர் ஏற்பதாக நால்வரின் சார்பாக பூ.சா.கோ. கங்கா நாயுடு முதலில் அறிவித்தார்.  “நல்ல தொடக்கம் பாதி முடிவு” என்பதை உறுதி செய்யும் வகையில் பூளைமேட்டில் வசதிமிக்க குடும்பத்தினர் பலரும் குறிப்பிட்ட தொகையைத்  தருவதாக ஒப்புதல் தந்தனர். தொகை தர இயலாத ஊர்மக்கள் பலரும் அதற்கு ஈடான,  உடலுழைப்பையோ. கட்டுமானப் பொருள்களையோ தருவதாக உறுதி கூறினர்.  கோவை, திருப்பூர்,  உடுமலை போன்ற பல ஊர்ப்பெருமக்களும் இப்பள்ளி உருவாக உறுதுணை புரிந்தனர்.

அடித்தள தகடு

அடித்தள தகடு கல்வெட்டு

ஸ்ரீராமஜெயம்

சென்னை மாகாணத்தின் அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு A.P. பாத்ரோ அவர்கள்  01.05.1922-ஆம் நாள், சர்வஜன பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். கட்டிடப் பணி தொடங்கிய நாள்முதல் முடியும் நாள்வரை. தொடர்ந்து மேற்பார்வையிடுவதில் விழிப்பாய்ச் செயல்பட்டு வந்தனர் பூ.சா.கோ. சகோரர்கள்.  

கட்டிடப் பணிக்கு மட்டி இப்படி ஆட்ட வேண்டும், கற்கள் இப்படி இருக்க வேண்டும்  என்று ஒவ்வொரு செயலையும்  வெகு கவனமாக விளக்குவார் பூ.சா.கோ. அரங்கசாமி நாயுடு.  ஆட்டிய மட்டியைக் கையில் எடுத்துச் சுவரில் வீசுவார்.  மட்டியின் கலவைத் தரத்தில்  மனநிறைவு  வந்தால் மட்டுமே. பணியைத் தொடரச் செய்வார்.  கட்டிடப்பணி இரவு நேரங்களிலும்  தொடர்ந்து நடைபெறும். கட்டிடப்பணிக்கான தேக்கு மரங்கள்  பர்மா (இன்றைய மியான்மர்)  நாட்டிலிருந்து  வந்து இறங்கின. மேற்கூரைக்கான இரும்பு விட்டங்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டன.  பள்ளிக்கட்டிடத்தின ஒவ்வோர் அங்குலமும் பார்த்துப் பார்த்து இழைத்து உருவாக்கப்பட்டது.

ஆங்கில அகரவரிசையில் 26 எழுத்துகளை நினைவூட்டும் 26 படிகளைக் கொண்ட  தேக்கு மரப்படி  முதன்மைக் கட்டிடத்திற்கு எழில் சேர்க்கிறது.   முருகு கூட்டி நிற்கிறது.   

 

 

கவின்மிகு கட்டிடத்தின் மேற்கூரை  விட்டங்கள்  இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதற்கு சாட்சியாய் கம்பீரமாய் காட்சி தருகிறது.

 

 

ஒருவழியாக பூ.சா.கோ. சகோரதர்களின் கனவு மெய்ப்பட்டது.  அவர்கள் அகத்தில் கட்டிய அறிவாலயம், புறத்திலே பிரசன்னமாகி பூரிப்படையச்செய்தது. அனைவரின் ஆவலும் நிறைவேறும் வண்ணம் 04.06.1924​-ஆம் நாள். அன்றைய சென்னை மாகாண மேல்சட்டசபை உறுப்பினர் திரு.வெங்கடரமண அய்யங்கார் சர்வஜன உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கி வைத்தார். சிரவை கவுமார மடாலயத்தின் மடாதிபதி தவத்திரு இராமானந்த அடிகளார்  கட்டிடத்தை  புனிதப்படுத்தினார். 

பூ.சா.கோ. அரங்கசாமி நாயுடு அவர்கள். மனதில் சுமந்த கனவை, தோளில் சுமக்கும் அறங்காவலராகப் பொறுப்பேற்க, திரு.வி.இராமச்சந்திர அய்யர் தலைமையாசிரியராக வழிநடத்த, 7 ஆசிரியர்களுடனும் 170 மாணவர்களுடனும் தமது வெற்றிப் பயணத்தைத் துவங்கியது சர்வஜன உயர்நிலைப்பள்ளி.  அன்றைய  நாளிலேயே. மாணவர் விடுதி  வசதியும் தேவைப்படுவோருக்குத் தரமாகத் தரப்பட்டது.

அப்போதைய விடுதி மாணவர்கள் மற்றும் சர்வஜன வித்யாசாலா ஊழியர்கள்

பூ.சா.கோ& சன்ஸ் அறக்கட்டளை விடுதியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்

நோபல்பரிசு பெற்ற கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள். 1926-  செப்டம்பர் மாதம்  நம் பள்ளிக்கூடத்தில், தாம் இயற்றிய ‘ஜன கண மன’ பாடலை தம் வாயால் பாடி மகிழ்ந்தார்.  அன்றைய  நாள்முதல்  அப்பாடலே நமது பள்ளியின் நாட்டு வணக்கப்பாடலாக தினந்தோறும் காலைக் கூட்டரங்கில் பாடப்பட்டது.   1950 ஜனவரி 24- ஆம் நாள்தான் நமது இந்திய அரசு   ‘ஜன கண மன’ பாடலை தேசீயகீதமாக அங்கீகாரப்படுத்தியது.  ஆனால் அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியவரே பாட. அதனை தினந்தோறும் பாடிய தனிப்பெருமை நம் பள்ளிக்கு உண்டு.

ஸ்ரீ ஜி.கிருஷ்ணன் (பொருளாளர், பிஎஸ்ஜிஆர் நினைவு அறக்கட்டளை), ஸ்ரீ கே.இ.நாராயணசுவாமி நாயுடு (உறுப்பினர், பி.எஸ்.ஜி.ஆர் நினைவு அறக்கட்டளை) ஆகியோருடன் 1931-32 இல் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் (SSLC) தேர்வில் பங்கேற்ற மாணவர்கள்

WIDE ANGLE VIEW

பரந்த கோணக் காட்சி

கல்விபெற வசதியல்லாத குடும்பங்களுக்குக் கல்விஒளி தந்த பூ.சா.கோ. சர்வஜன  பள்ளியால் கோவைக்குப் பெருமை.  வெறும் கல்வி அறிவைத் தருவதை மட்டும்  தம் பணியாகக் கொள்ளாமல் பிறகலைகளிலும், ஒழுக்கத்திலும். பண்பிலும் உயர்ந்து சிறந்த  குடிமக்களை  உலகிற்குத்  தருவதையே  தமது முக்கிய முதன்மையான கடமையாகக் கொண்டு அன்றுமுதல் இன்றுவரை செயல்பட்டு வரும் பூ.சா.கோ. அறநிலையத்தின் முதல் நிறுவனமான பூ.சா.கோ. மேனிலைப்பள்ளி  கோவையின் அனைத்துப் பள்ளிகளுக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து கோவைக்குப் பெருமை சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது. மாணவர்களை வெற்றிச் சிகரத்தில் ஏற்றி சாதனை படைத்து சரித்திரத்தில் இடம்பிடித்து  சிரம் உயர்த்தி நிற்கிறது பூ.சா.கோ. சர்வஜன  மேல்நிலைப் பள்ளி.